Friday, May 30, 2014

பிரம்மோதய மெய்வழிச்சாலை ஆண்டவர்களின் திருவரலாறும், மெய்வழிச் சபையும்

ஆதியே துணை


         தேவ உலக தீர்மானப்படி நிகழ இருக்கும் ஏழாம் பிரளயமும் ஆதி பரம்பொருளான ஆண்டவர்களின் திருஅவதாரமும். அளப்பரிய ஏக இருட் கோளத்தில் விசும்பி எழும்பிய பேரொளி பிழம்பான ஆதிமூல பரம்பொருளுக்கு, இவ்வுலகம் அனைத்தையும் உண்டாக்கி அருளாட்சி புரிந்து நல்லாட்சிசெய்ய ஆலோசனை தரும் உரிமையுடைய தேவ உலகம் ஒன்று உண்டு. அப்பாலுக்கு அப்பாலாய் சரித்திரத்திற்கு எட்டாத நாள் தொட்டு இறப்பு, பிறப்பு அற்ற, ரூபசொரூபமற்ற வான்உலக பரலோக தேவமக்கள் இதில் உள்ளனர். தலைநாளுக்கு அப்பால் தலைநாளாகிய ஆதி சபேசிய ரகசிய காலத்திலிருந்நே இந்த தேவ உலக மக்கள், இறை தூதுவர்களாக, மெய்ஞ்ஞான பாரவான்களாக மனித கோலமெடுத்து மனிதருக்குள் மனிதராக இப்பூ உலகிற்கு வந்து, மக்களுக்கு மெய்ஞ்ஞான அருள் தந்து உய்விக்கும் கடமையைப் பூண்டவர்கள். 

                                      “வந்திடுவேன் யுகந்தோறும் யுகந்தோறும்” 

என்று கூறும் கிருஷ்ண பரமாத்மாவின் பகவத்கீதையில் இந்த உண்மையை அறியலாம். “தேவ கூட்டுறவு திருமரபு கூட்டத்தினர்” என்று இந்த தேவ மகா புருஷோத்தமர்களுக்குப் பெயர். ஸ்ரீ கண்ணபிரான், ஸ்ரீ ராமன், ஏசுபிரான், நபிகள் நாயகம் போன்ற இலட்சத்து இருபதாயிரத்திற்கு மேல் இந்த மாமுனிவர்கள் வாழையடி வாழையாக உலகிற்கு அவதாரம் செய்து வந்திருக்கிறார்கள் என்பதை சத்தியவேதமான பைபிள், திருக்குர்ஆன் மற்றும் சைவ, வைணவ, பௌத்த சுருதி வேத கிரந்தங்களில் காணலாம். 


இறைவன் தனது நான்கு கோடி சூரிய பிரகாச கிரணங்களை அடக்கிக் கொண்டு மனித ரூபத்தினுள்ளே உள் புகுந்துள்ளதை எடுத்துக் காட்டும் வல்லபம் இறைவனின் முதன்மை கிரணங்களான இந்த இறை தூதுவர்களிடம் மட்டுமே தலைமுறை தலைமுறையாக ஊற்றோடி ஓடி இன்று வரை வந்துள்ளது. வேதத்தையும், மதத்தையும் உண்டாக்கியவர்களும் இவர்களே. அகண்டாகார பெருவெள்ள மெய்ஞ்ஞான பெட்டகத்தின் பொக்கிஷ அறையைத் திறக்கும் மந்திர மாத்திரை திறவுகோல் கொண்டு தங்கள் பெருங்கருணையால் இந்தத் தேவதூதர்கள் உலக மக்களுக்குத் திறந்து காட்டி, ஞான அறிவு தந்து பரமபதம் அடையச் செய்கிறார்கள். இது இறைவனின் தீர்ப்பு. 


இப்போது பாவம் நிறைந்து விட்ட இந்தப் பூமி, இனிமேலும் பாவகனத்தைச் சுமக்க இயலாததால் தெய்வத் திருவளநாட்டு நித்திய சூரியர்கள் ஒன்று திரண்டு கூடி, முன்னமேயே நிர்ணயிக்கப்பட்ட சந்திரசாப கணக்கின்படி ஏழாம் ஊழிப் பிரளய முடிவு நியமன தீர்ப்பு நாள் இப்போது நெருங்கிவிட்டதைப் பற்றி கலந்து பேசினார்கள் என்பதை வந்த எல்லா வேதங்களும் எடுத்துக் காட்டுகின்றன. புது உலகம் பிறப்பிப்பான் வேண்டி, ஆதிமனு நீடாழியராகிய ஆதிமூல பரம்பொருளே, ஜீவ தயாபரராக ஜகம்உய்யும் பொருட்டாய் மனுக்கோலமெடுத்து, இறுதிகால நிக்கிரக அனுக்கிரக பணி ஏற்று, உலக மக்களை உய்விக்க இப்பூ உலகிற்கு அவதரித்து செல்ல வேண்டு மென்று வேண்டிக் கொண்டுள்ளார்கள் என்ற வரலாற்றைப் பழம் மாமறைகளில் காணலாம்.மேலும், அப்படி மெய்ரூபமாக பரம்பொருள் எழுந்தருளும் போது, ஏற்கெனவே இதுவரை இப்பூமண்டலத்திற்கு வந்து, ஜீவ தேகம் பெற்று, மண்ணில் மறைவு செய்யப் பெற்றிருக்கும் மதிமகத்துக்கள் அனைவரும், உடன் எழுந்து அவருடன் அவதரித்து வந்து, சாகா வர நித்திய தேகம் எடுப்பதற்காக - ஊழிப்பிரளய நீதித்தீர்ப்புக்கு காத்திருக்கும்படி கட்டளையும் பிறப்பிக்கப் பெற்றது. 

அதன் பொருட்டு, சிருஷ்டி முதலிய ஐந்து கிருத்தியங்களையும் செய்யும் சர்வேஸ்வரனே, இந்த சர்வமத வேதகர்த்தர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வான் வேண்டி, பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களாக அவதரித்து வந்த வரலாற்றையே இப்போது நாம் காண்கிறோம். இப்படி அவர்கள் அவதரிப்பதைப் பற்றி, அந்த தேவ திருக்குழாம், தாங்கள் வருகை தந்த ஒவ்வொரு காலத்திலும் தங்கள் தவ வலிமையால், ஆண்டவர்களின் இந்த வரலாற்றைக் கூடவே இருந்து பார்த்தவர்கள் போல், திடதீர்க்க திருஷ்டியில் தீர்க்க தரிசனங்களாக பல ஆயிரமாயிரம் கிரந்தங்களில் உலகிற்கு எழுதி அறிவித்து வந்திருக்கிறார்கள். இப்படி அவதரித்து வந்த ஆதி மனுமகன், அனைவருக்கும் யுகங்கோடி முடிவு ஜகக்கோடி வாழ்வு வழங்கி, சாவாவரம் தந்து கொண்டிருக்கும் மாபெரும் செய்தியின் சுருக்கத்தையே இப்போது தெரிவித்துள்ளோம். 

தீர்க்க தரிசனமாக இந்த ஆதிமூல ஆவியின் அவதாரத்தைக் கண்டு “சன்மார்க்க சாலையப்பா என்னை வந்து தாங்கிக் கொள்ளே” 


என்று வேண்டுகிறார் வடலூர் வள்ளல் பிரான். பிற்காலத்தில், தவ ஏற்றம்கொண்டு சர்வ சன்னததாலங்கிர்தராக உருவெடுத்த மெய்வழி தெய்வம், அன்று பாண்டிவள நாட்டில், அதாவது தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்தில், மார்க்கம்பட்டி என்னும் சிற்றூரில் தமிழ் இஸ்லாமிய குடும்பத்தில் 19 ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1857 ஆம் ஆண்டில்) அவதரித்தார்கள். கொங்கு வளநாட்டில் அதாவது தற்போதைய ஈரோடு மாவட்டத்தில் திங்களூர் - பெருந்துறை, காசுக்காரன் பாளையத்தில், நெல் வணிகம் செய்து செல்வ செழிப்போடு இல்வாழ்க்கையில் இருந்து வந்த காலத்தில், ஆதி ஊழிவிதி தேவ தீர்மானப்படி, தேவநாட்டிலிருந்து வழிவழியாக வந்த தனிகை மணி வள்ளல் என்னும்



பழம் பெரும் பிரம்ம சொரூப மாமுனிவர் அவர்களை 1901 ஆம் ஆண்டில் சந்தித்து, அச்செம்மலின் திருவருளுக்குப் பாத்திரமாகி, அவருடன் துறவு பூண்டு எழுந்தார்கள். தமது பெரிய வியாபாரத்தையும், இளம் மனைவியையும், பால் மனம் மாறா பெண் குழந்தையையும் விட்டு விட்டு பிரிந்து, ஏழை வடிவினராய் துறவு கோலத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். அவர்களுடன் இருபத்து மூன்று ஆண்டுகள் உடன் இருந்து நாடெங்கும் அகிலவலம் வந்து, பூரண ஞான தேவ வடிவு வேத போத ரகசியங்களையும், பூட்டப் பெற்றிருக்கும் தேவ திருவருள் தெய்வ ஆதின பாரம்பரை கட்டுத் திறவுகோலையும் கைவசம் பெற்று பூரண மெய்ஞ்ஞானி ஆகினார்கள். 

வடலூர் வள்ளற் பிரானுக்கு பூரண ஞான செல்வத்தைத் தந்து, அவரை உயர் ஞானியாக்கியவர், ஆண்டவர்களின் குருக்கொண்டலரான இந்த தனிகைமணி ஞான செம்மலே ஆவார்கள். இவர்களே தான், வள்ளலார் மறைவுக்கு (1874) பிறகு 27 ஆண்டு காலம் காத்திருந்து ஆண்டவர்களைக் கண்டெடுத்து ஞான பிரகாசத்தை அருளி பிரம்ம சொரூபியாக மாறச் செய்தார்கள். தொடர்ந்து ஆண்டவர்களுக்கு ஓர் அருந்தவ கட்டளையிட்டு, திருக்கயிலாய நாட்டு வேத விதிப்படி தன்னிகரற்ற மேருகிரி தவத்தில் ஆண்டவர்களை அமரச் செய்தார்கள். ஆண்டவர்களும் நெடுநாள் அன்ன ஆகாரமின்றி நிர்விகார ரகிதநிலையாசன தவக்கோலத்தில், கடுந்தியான முகத்திலிருந்து, கைவல்யபதம் அடையப் பெற்று, நித்திய ஜீவ மகா முனிவராகினார்கள். தனிகைமணி வள்ளல் அவர்களும், தேவமகா சபையில் தாம் முன்னரே வாக்கு தந்தபடி நீதித்தீர்ப்பு நடத்தும் பெரும்பார அருங்காரண செயலை ஆண்டவர்களிடம் ஒப்பிவித்து, மனுக் கோடிகளுக்கு கதிமோட்சம் தரும் பாசுபத கங்கண முத்திரையையும் அவர்களுக்குப் பதிப்பிக்கச் செய்தார்கள். மேலும், சர்வக்ஞ தன்மை கொண்ட இந்த ஞான செல்வத்தை, உலகம் முழுவதும் உய்யும்படி செய்து அனைவரையும் ஆட்கொள்ளும்படி ஆண்டவர்களுக்கு ஆணையிட்டு ஆசீர்பதித்தார்கள். ஆண்டவர்களும், தமது குரு கொண்டலர் அவர்களின் ஆக்ஞைபடியே, உலக மக்களை உய்விக்க, கலிவலி தொலைத்து தலையுகப் பயிர் ஏற்றும் பணிக்கென்றே, மெய்வழிச்சபையை உண்டு பண்ணி, இறைதிருவடிசேர் பெருநெறியில் கி.பி.1923 ஆம் ஆண்டு முதல் மக்களைச் சேர்த்து அனந்தாதி தேவ குலமாக்கினார்கள் மேலாம் பதம் தரும் ஜீவரட்சிப்பு அருள் உபதேசங்களை, உயிரினிமை உணவாக உலக மக்களுக்குத் தந்து, அனைவருக்கும் ஜீவ ஆவி அறிவானது எழும்பி மீறி ஏறிபூரிக்கின்ற அருள் அமுதத்தினை அருந்த அருந்த தந்தார்கள். 


ஞானப் பயிரேற்றம் செய்ய மெய்வழிச் சாலை என்ற ஊரையே உண்டு பண்ணினார்கள். 

“பன்னிரண்டு தேவ சன்னதங்கள் பெற்ற சிவமூர்த்தியாக இறுதி காலத்தில் வரும் இவரே தென்னாட்டுடைய சிவன்” 


என்று ஞான செம்மல் மாணிக்கவாசக பிரான் திடதீர்க்க தரிசனம் கூறுகிறார். “உடுக்கை சங்கு சூலம் தாங்கி வந்துள்ள இந்த மெய்வழி தெய்வத்தை பூஜிக்கின்ற அனைவரும் இடைஞ்சல்கள் நீங்கி மெய்யான ஞானமும் அடைவார்கள்” என்று தீர்க்க தரிசனமாக மகரிஷி வீரபிரம்மம் கூறுகிறார்.