.
ஆதியே துணை
மெய்குண்டம் என்னும் மெய்வழிச்சாலை மகிமையும் மெய்மதத்தின் பெருமையும் மெய்குண்டம் என்னும் மெய்வழிச்சாலை தரணி எங்கும் காணமுடியாத ஒப்பற்ற ஒரு தவ எல்லை ஆசியா கண்டம், இந்திய தமிழ் தொண்டமான் சீமை, புதுக்கோட்டை மாவட்டத்தில், கீரனூரிலிருந்து அன்னவாசல் போகும் சாலைக்கு அருகில், ஊரல் மலைச்சாரலில், இந்த மெய்வழிச் சாலை என்னும் தேவபூமி உள்ளது.
மக்களுக்கு வரமனைத்தும் தந்தருளும் தேவ ரூபமாக மாறி இங்கு ஏழாம் ஊழிப்பிரளய அமளி மிகுந்த நாளின் இறுதி தீர்ப்பினை நடத்தும் பொருட்டு, வான் கன்னி விராட் தவத்தில் ஏறியுள்ள மெய்வழிச்சாலை ஆண்டவர்களின் வான் செல்வ ஜீவத் திருமேனியின் பரிசுத்த ஆவி சதாவீசி கருணை பாலித்து கொண்டு இருக்கும் புண்ணிய ஸ்தலம் இது அனந்தர் குல சிந்தை மந்திரமான இந்த மெய்வழி தெய்வத்தின் இந்த ஸ்தலம், பொல்லாப்பிணி நீக்கும் பெருந்தவப்பள்ளியாகும்.
மெய்வழிச்சாலை - மெய் நகரம் இந்த சத்திய மெய்வழி திருவருள் நகரத்தில், இந்த ஆதிமூல ஆவியின் மெய்க்கிரண பரிசுத்தாவி சதா நின்று விசிறி வீசி, அனைவருக்கும் கருணை பாலித்து சகல இக பர சௌபாக்கியம் அளித்துக் கொண்டிருக்கிறது. ஜெகம் உய்ய வந்துள்ள ஜீவ வழிப்பாட்டு வசந்த எல்லை இது. ஜீவரட்சிப்பு தந்தருளும் புனித பூமி இது. துன்பம் தரும் நவக்கிரக கோள்களின் பீடிப்பை நீக்கச் செய்யும் தரும பூமி இது! துஷ்ட நிக்கிரக, தேவசிஷ்ட பரிபாலனம் செய்யவே, நீதி நெறி சூடாமணி கோடாயுத தேவ சன்னதங்களைப் பெற்று அமர்ந்திருக்கும் தெய்வத்தின் பதி இது! பாவ சங்கார வரதரின் ஜீவ சஞ்சீவி மாமலையே இந்த மெய்வழிச் சாலை! “இதன் பெயர் மெய்நகரம். இந்த மெய்க்குருபிரானைத் தரிசித்தால் மறுபிறப்பு என்னும் தேவப்பிறப்பில் ஆக்கி உயிர்ப்பித்து எழுப்புவார்கள்” என்று பிரம்ம ஞானோத்தமர் கபீர்தாஸ் அவர்கள் திட தீர்க்க தரிசனம் கூறுகின்றார்.
“இந்த ஸ்தலம் காருண்ய ஸ்தலமாக மாற்றப்பெறபோகிறது என்று - அடிபேரிகை” என்று நித்திய சூரியர் வீரபிரம்மம் அவர்கள் தீர்க்க தரிசனம் முழங்கி வைத்துள்ளார். அழிவற்ற ஆன்மிக உன்னத வழியே மெய்வழி தேவ திருநாட்டு குருகுல மக்களின் திருச்சபையே மெய்வழி! இறுதி தீர்ப்பு பிரளய நீதி நடத்தி வையம் முழுவதும் ஒரே குருகுல நெறி நீதியில் ஆக்கிட, நீதிக்கோள் தாங்கி வந்து தருமயுக வித்து நாயகத்தின் இறைபெரு வழியே மெய்வழி! மெய்வழியும் மெய்க்கல்வி கலாசாலையும் மெய்வழிச் சபையின் வித்து நாயகம் பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்களே, மெய்க்கல்வி கலா சாலையின் போதனாசிரியர் ஆவார்கள்.
முன்னாதி காலம் முதல் தொடர்ந்து வரும் முனிவர் வழி வழி மகா மந்திர பிரேரணை தேவ ரகசியத்தை மெய்க்கல்வி கலாசாலையில் மக்களுக்கு ஆண்டவர்கள் தெள்ளத் தெளிவாக போதித்துள்ளார்கள். ஆதீன ஆதி பரம்பரை பூர்வீக புராதன மெய்ஞ்ஞான கல்வியை உலகிற்கு விளக்கி எடுத்துரைக்க வந்தவரே இந்த ஜெகத குருக்கொண்டல்! “எவ்வழி மெய்வழி என்ப வேதாகமம் அவ்வழி எனக்கருள் அருட்பெருஞ் சோதி” என்று வேண்டுகிறார் வடலூர் வள்ளல் பிரான்.
“இந்த இறுதி தீர்ப்பரை வணங்குவோர் மீட்புக்குரிய தீர்க்க தரிசியர்கள் ஆவார்கள்” என்று வேதச் செம்மல் சொராஸ்டர் நாயகம் கூறுகிறார்.




