.
ஆதியே துணை
மெய்வழி சாலையம்பதியில் எடுத்து வைக்கப்பெற்றுள்ள வணக்க முறைகள் மெய்வழி பொன்னரங்க தேவாலயத்தில், நாள் முழுவதும் இரவு பகலாக தவ வணக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன.
1. இரவு சரியாக 12 மணிக்கு பெரிய வணக்கம் ஆரம்பமாகிறது. மெய்வழி தவவிரதர்கள் இதனை நடத்துகிறார்கள்.
2. இரவு 1.30 மணிக்கு துந்துமி முழங்கி வணக்கம் செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஒரு குழல் ஊதி வணக்கம் நடைபெறுகிறது.
3. இரவு 3.00 மணிக்கு ஒரு குழல் வணக்கம் மட்டுமே நிகழ்கிறது. இது நிகழும் போது ஆலயத்தின் உள்ளே யாரும் இருக்கக்கூடாது. அடுத்து உத்தியோவன சித்தி கானகம் என்று சொல்லி திட தீர்க்க தரிசனங்கள் ஆலயத்தை நோக்கி ஜபிக்கப்படுகிறது.
4. இரவு 4.00 மணிக்கு மெய்வழி மக்களுக்காகவே கூறப்பெற்றுள்ள புத்த பகவான் தீர்க்கதரிசனம் உரைக்கப்படுகிறது.
5. இரவு 4.30 மணிக்கு வெறும் துந்துமி மட்டும் ஒலித்து வணக்கம் நிகழ்கிறது. அடுத்து ஆண்டவர்களைத் தோத்தரித்து பஞ்சணை எழுச்சி பாடப் பெறுகிறது.
6. விடியற்காலை 5.30 மணிக்கு ஆண்டவர்கள் திருவரலாற்றைக் கூறும் ஆதிமான்மிய பகுதி ஓதப்பெறுகிறது.
7. காலை 7.00 மணிக்கு, மகா சங்கல்ப மந்திரம் ஓதப்பெறுகிறது.
8. மத்திய உச்சி உரும கற்பகத்தவக் காலம் நன் பகல் 12.00 மணிக்கு அறவலம் நிகழ்கிறது. ஆண்டவர்களின் உருமகால கற்பக தவநேரத்தில் யாரும் ஒருவரோடொருவர் பேசக்கூடாது என்று ஆலயமணி அடித்து அறிவிக்கப்படுகிறது. மாலை ஆனவுடன் ஆண்டவர்கள் எடுத்து வைத்துள்ள முறைப் படி வணக்கம் நிகழும்.
9. இரவு 9.00 மணிக்கும் இதே போன்று வணக்கம் நிகழும். புத்த பகவான் தீர்க்க தரிசனமும் ஓதப்பெறும்.
10. ஆண்டு முழுவதும் நடைபெறும் மெய்வழி கிள்நாமக் கொடியேற்றங்கள் “மெய்ஞ்ஞான கொடி ஏற்றி அனைவரையும் தூரத்தில் உள்ளவர்களையும் பயில்காட்டி அழைப்பார்கள்” என்று ஏசய்யா தீர்க்க தரிசனம் கூறுகின்றார்.
அதன்படியே, உதய நெடும் உயர்ஞானக்கொடி பொன்னரங்க தேவாலயத்திற்கு முன்பு ஏற்றப்பெற்று, இறை திருவடிச்சேர் உலக மக்களை அறைகூவி அழைத்து ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று மெய்வழி கிள்நாம கொடியேற்றமும், வளர் பிறைமூன்றாம் நாள் மெய்வழி மாதாந்திர கிள்நாமக் கொடியேற்றமும் மெய்வழி அனந்தர் பெருமக்களால் தவமுறை பக்தி பரவசத்துடன் ஏற்றப் பெறுகின்றது.
